காவல் ஆணையர் அலுவலகத்தில் நடமாடும் சிறை சந்தை மூலம் கைதிகளின் தயாரிப்புகள் விற்பனை

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடமாடும் சிறை சந்தை மூலம் கைதிகளின் தயாரிப்புகள் விற்பனை
Updated on
1 min read

சென்னை: சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதை காவல் துறையினர் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர்.

சென்னை புழல், வேலூர், திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு சிறையிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள், சிறையின் வெளியே, அலுவலகம் அமைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழக சிறைத் துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை எழும்பூரில் சிறைச்சந்தை விற்பனை மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை பெருக்கும் வகையில் வாகனம் மூலம் நடமாடும் விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களுக்கு மாதம் ஒரு முறை இந்த வாகனம் மூலம் கைதிகளின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது திங்கள்கிழமை அன்று சிறைச்சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நடமாடும் சிறைச் சந்தை இயங்கியது. இந்த சந்தையில் ஒவ்வொரு ஊரின் பிரபலமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சிறைக் கைதிகளுக்கு நாளொன்று ரூ.300 ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச் சந்தையில் கிடைக்கும் பொருட்களை காவல் துறையினர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in