காஞ்சி மாவட்டம் எருமையூரில் உள்ள 52 கல் குவாரிகள் அனுமதியுடன் செயல்படுகிறதா? - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காஞ்சி மாவட்டம் எருமையூரில் உள்ள 52 கல் குவாரிகள் அனுமதியுடன் செயல்படுகிறதா? - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் உள்ள 52 கல் குவாரிகள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இ.வி.சம்பத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் எருமையூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 52-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளதுடன் ஒலி மற்றும் காசு மாசுவும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக எருமையூரில் பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதனால் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள பல ஆலைகள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன. எனவே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த இரு வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கறிஞர் ஆணையர்கள் இந்த கல்குவாரிகள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி ஆகியோரும் உடன் செல்ல வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in