

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு ஒபிஜி மற்றும் பி விண்ட்எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சோலார்தகடுகள், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக இந்நிறுவனத்தின் மீது புகார்எழுந்தது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆந்திரா உள்ளிட்ட அந்நிறுவனத்துக்கு சொந்தமான 15 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன்பகுதியில் உள்ள ஒரு வீடு, தேனாம்பேட்டை கே.பி. தாஸ் சாலையில் உள்ளஒரு அடுக்குமாடி குடியிருப்பு, சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில்உள்ள தனியார் நிறுவனம், செங்கல்பட்டில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலார்மேடு பகுதியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.