Published : 12 Jun 2018 11:14 AM
Last Updated : 12 Jun 2018 11:14 AM

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கமே உலகத்தில் எந்த நாட்டிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான். பள்ளிப்பருவத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது கட்டாயம்.

ஆனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத பெற்றோர்கள் வறுமையைக் காரணம் காட்டி வேலைக்கு அனுப்புகின்றனர். இக்காரணத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும், அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க முயற்சிகள் எடுக்கும் நோக்கத்தில் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்.

அதேபோல் வறுமைக்கோட்டில் இருக்கின்ற, வசதியில்லாத குடும்பத்தில் இருக்கின்ற, பள்ளிக்கு வராமல் இருக்கின்ற குழந்தைகளை அடையாளம் காண வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. அவர்களை அடையாளம் கண்டு கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கின்றனர் என்ற நிலையை ஆண்டுதோறும் ஏற்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

ஏற்கெனவே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையில் தங்களது பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தங்களால் இயன்ற பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் எவரிடமாவது கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில், கடன் கொடுத்தவர்கள் எக்காரணத்திற்காகவும் குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தக்கூடாது.

 பெற்றோர்களும் தாங்கள் வாங்கிய கடனுக்காகவோ அல்லது வறுமையில் பணம் இல்லாமல் இருப்பதாலோ அல்லது வேறு எக்காரணத்திற்காகவோ குழந்தைகளை வேலைக்கு அனுப்ப முயற்சி செய்யக்கூடாது. எனவே பெற்றோர்கள் மட்டுமல்ல அரசும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதால் அவர்களின் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம், சமூகம் ஆகியவை பாதிக்கின்றன. இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றமாகும். அதற்காக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளது. ஆனாலும் பல பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் இருக்கின்றனர் என்ற செய்தி வேதனையளிக்கிறது.

எனவே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான சட்டத்தை முறையாக கடைப்பிடித்து, குழந்தைகள் தொழிலாளர்களாக வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில், கட்டிடங்களில் என எங்கு வேலை செய்தாலும் அவர்களை மீட்டெடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான். மேலும் தமிழக மக்களிடம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி மாநிலத்தில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளின் சமூகப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

இன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x