Last Updated : 20 Aug, 2014 08:50 AM

 

Published : 20 Aug 2014 08:50 AM
Last Updated : 20 Aug 2014 08:50 AM

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு புது நெருக்கடி: முறைகேடு செய்யப்பட்ட தொகையை அதிகாரிகளிடமும் வசூலிக்க முடிவு

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக் கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு மது விற்பதைத் தடுக்க, முறைகேடு செய்யப்பட்ட தொகையை ஊழியர்கள், அதிகாரிகளிடமே வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், முறைகேடு வழக்குகளை விரைந்து முடிக்க, ஓய்வுபெற்ற அதிகாரிகளை விசாரணை அலுவலர்களாக நியமித்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சவுண்டையா அனுப்பியுள்ள சுற்றறிக்கைகள் விவரம்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடத்தும் சில்லறை மதுபானக் கடைகளில் மாநிலம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுவை விற்பது தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 21-ம் தேதி மதுரை மாவட்டத்தில் 18 மதுபானக் கடைகளில் ஆய்வு செய்ததில் ரூ.15.94 லட்சம் அளவுக்கு கூடுதல் விலைக்கு மதுவை விற்றது கண்டறியப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளிலும் இந்த முறைகேடு காணப்படுகிறது. தலைமை அலுவலக அறிவுரைகளை மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் முழு அளவில் அமல்படுத்தாததையும், களப்பணியின்மையையும், முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததையும் இது காட்டுகிறது.

டாஸ்மாக் வியாபார நிறுவனம்

டாஸ்மாக் ஒரு வியாபார நிறுவனம். அதன் வியாபார நடவடிக்கைகளில் பெரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிதியிழப்பு/மோசடி எள்ளளவும் நடைபெறாமல் கண்காணிக்கவே உயர் நிலை அலுவலர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக மாநில அளவில் கடை விற்பனையாளர்கள் மது வகைகளை கூடுதல் விலைக்கு விற்பது போன்ற பல முறைகேடுகள் தெரியவருவதால், இனி வருங்காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், தொடர்புடைய மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் மீது துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நிதியிழப்பு ஏற்பட்டால் அதை அவர்களிடமே வசூலிக்க நேரிடும். எனவே, இனிவரும் காலங்களில் குறைகள் அறவே களையப்பட வேண்டும்..

நீதிமன்றம் நிராகரிப்பு

மாவட்ட அலுவலகங்களில் சில்லறை விற்பனை விவரம் மற்றும் பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த கோப்புகள் சில விசாரணையின்றியும், சில இறுதி ஆணை பிறப்பிக்கப்படாமலும் உள்ளன. மேலும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தில் மேற்படி ஆணை கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அலுவலர்களாக நியமிக்கப்பட் டவர்களுக்குத் தக்க அனுபவம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. எனவே ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களை உள் விசாரணை அலுவலர்களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளான ஆர்.நடராஜன் (கூட்டுறவு துணைப் பதிவாளர், தஞ்சை), எம்.பாஸ்கரன் (கூட்டுறவு சார் பதிவாளர், திருச்சி), வெ.மாணிக்கம் (துணை பதிவாளர், திருச்சி), டி.மாதவமூர்த்தி (கூட்டுறவுத் தணிக்கை கூடுதல் இயக்குநர், வேலூர்), எம்.ஆறுமுகம் (தொழி லாளர் உதவி ஆய்வாளர், சென்னை) உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மதுபானம் விலை இன்று முதல் உயர்வு?

டாஸ்மாக் மதுபானங்களின் விலை புதன்கிழமை (இன்று) முதல் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்த வகைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில், மதுபானங்களின் விலை இன்று (புதன்கிழமை) முதல் உயர்த்தப்படும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘புதிய விலைப் பட்டியல் அனைத்து மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விஸ்கி, பிராந்தி ஆகியவற்றின் விலை குவார்ட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்கிறது. அதேபோல பீர் விலையும் ரூ.10-ம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது’ என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விலை உயர்வின்மூலம் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x