Published : 17 Jun 2018 11:17 AM
Last Updated : 17 Jun 2018 11:17 AM

சென்னையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: ஆயிரக்கணக்கானோர் கூட்டுத் தொழுகை

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று நோன்பிருத்தல். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வர். 30 நாட்கள் நோன்பு நிறைவடைந்தப் பிறகு, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. ஜூன் 16-ல் ரம்ஜான் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

அதன்படி, நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்வுடன் கலந்துகொண்டனர். தொழுகை முடிவடைந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பிராட்வேயில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி மைதானம், திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளிலும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டனர்.

ஐஸ்அவுஸ், பெரியமேடு பள்ளிவாசல், மண்ணடி உட்பட பல்வேறு இடங்களில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு, பள்ளி வாசல்கள் முன்பு கூடியிருந்த ஏழைகளுக்கு இஸ்லாமியர்கள் புத்தாடை, உணவு வழங்கினர். ஒரு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x