கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான மூவரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மூவரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள தற்காலிக முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உக்கடம் போலீஸார் விசாரித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது என்ஐஏ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி, உயிரிழப்பு ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த முபினும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கைதான 17 பேரில், போத்தனூரைச் சேர்ந்த அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த பயாஸ் ரகுமான் ஆகிய மூவர் , கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மேற்கண்ட மூவரும், கார் வெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்ற தேவையான நிதியை கமிஷன் அடிப்படையில் பெற்றுக் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற, அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பயாஸ் ரகுமான் ஆகிய மூவரையும் என்ஐஏ அதிகாரிகள் தங்களது காவலில் விசாரிக்க எடுத்தனர். தொடர்ந்து இன்று (நவ.11) காலை மூவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை காவலர் பயி்ற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள தற்காலிக என்ஐஏ முகாம் அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதியுதவி அளித்தவர்கள் யார், நிதியுதவி பெற உதவி செய்தவர்கள் யார், யார் யாரிடம் நிதி பெறப்பட்டுள்ளது, யார், யாருக்கு நிதி பெற்று அளிக்கப்பட்டுள்ளது, வேறு என்ன செயல்கள் அரங்கேற்ற திட்டமிடப்பட்டிருந்தது என்பன போன்ற தகவல்கள் குறித்து மூவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிகிறது. மேலும், மூவரையும் அவர்கள் சந்தித்து பேசிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in