

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஊரக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 39 லட்சம் உறுப்பினர்களுக்கு திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து சுய உதவிக்குழுக்களுக்கும் திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஊரகப் பகுதிகளில் உள்ள 3.29 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் 39.48 லட்சம்உறுப்பினர்களுக்கு ரூ.30 கோடிமதிப்பீட்டில் நிர்வாகம், நிதிமேலாண்மை மற்றும் தலைமைத்துவம் குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தை வாய்ப்புகள்: இந்த பயிற்சியில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணை மற்றும் பண்ணை சாராசெயல்பாடுகள், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், திறன்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், பாலின விழிப்புணர்வு, சுய தொழில் மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும், தமிழக அரசின் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம் போன்றவற்றில் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி அந்தந்த ஊராட்சிகளில் 3 குழுக்களுக்கு ஒரு அணி(36 பேர்) என்ற வகையில் 1.09 லட்சம் அணிகளை சேர்ந்த 39.48லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த புத்தாக்க பயிற்சியை வரும் 2025 ஜனவரிக்குள் நிறைவு செய்யுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.