

சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தாலும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தில் 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அண்மையில் சென்னை, மதுரையில் ஒருநாளில் ஓரிரு இடங்களில் 10 செ.மீ. வரை மழை பொழிந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.
தமிழக நீர்வள ஆதாரத் துறை, மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் அதிகம்: அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த அக்டோபர் மாதத்தில் கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், நீலகிரி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 0.63மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்திலேயே தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1.35 மீட்டர் குறைந்துள்ளது என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.