

சென்னை: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், மதுரை, கோவை உட்பட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 27 கி.மீ. உயர்மட்ட பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைகின்றன.
கோவையில் 39 கி.மீ. தொலைவில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசு வாயிலாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் கடந்த ஆண்டு ஜூலையில் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை 936 பக்கத்திலும், கோவை மெட்ரோ திட்ட அறிக்கை 655 பக்கத்திலும் இடம் பெற்றன.
இந்த திட்ட அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை தொடர்ந்து, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கையில் கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு மத்திய அரசு தெரிவித்தது.
அதாவது, மெட்ரோ மட்டும் இன்றி, லைட் மெட்ரோ, பி.ஆர்.டி.எஸ். போக்குவரத்து திட்டங்களுக்கான விவரங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையையும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த அறிக்கையை ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்ததால், தற்போது அவற்றையெல்லாம் சரிபார்த்து விட்டோம். இன்னும் ஓரிரு வாரத்தில், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.