Last Updated : 27 Jun, 2018 08:56 AM

 

Published : 27 Jun 2018 08:56 AM
Last Updated : 27 Jun 2018 08:56 AM

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் திருவள்ளூர் மாவட்டத்தில் 4,145 குழந்தைகள் கண்டுபிடிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் 4,145 மாற்றுத் திறன் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணியில் 4,145 மாற்றுத்திறன் குழந்தைகள் கண்டறியப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வில்லிவாக்கம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 6 முதல் 14 வயது உடைய மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது.

இதில் 2,483 ஆண் குழந்தைகள், 1,662 பெண்கள் குழந்தைகள் என, 4,145 மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட மொத்த குழந்தைகளில், அறிவு சார் குறைபாடு கொண்டவர்கள் 2,140 பேர், செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் 400 பேர், உடலியக்க குறைபாடு கொண்டவர்கள் 332, திசு பன்முக கடினமாதல் குறைபாடு உள்ளவர்கள் 310 பேர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 287 பேர்.

அதே போல், குறை பார்வை உள்ளவர்கள் 247 பேர், பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு கொண்டவர்கள் 206 பேர், புற உலக சிந்தனை குறைபாடு அல்லது மன இறுக்கம்(ஆட்டிசம்) உள்ளவர்கள் 144 பேர், பார்வையின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் 63 பேர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 16 பேர் என்பது தெரிய வந்துள்ளது.

இக்குழந்தைகளில் 3,328 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல், 817 குழந்தைகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ், திருவள்ளூர், வேப்பம்பட்டு, நொளம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான, 22 சிறப்பு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x