ஓசூரில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை

ஓசூரில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை
Updated on
1 min read

ஓசூரில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் கொல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜான்பாஷா (52). இவரது உறவினர் மன்சூர் (42). நேற்று இரவு இருவரும், ஓசூர் ரயில்வே நிலைய பகுதியில் நடைபயற்சி சென்றனர். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் ஆயுதங்களால் பலமாக தாக்கி, கடத்திச் சென்றது.

தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாள், டிஎஸ்பி கோபி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் ஜான்பாஷாவின் மனைவி பஷில்நத்தை (30) தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் ஜான்பாஷா, மன்சூரை விடுவிப்பதாக கூறி மிரட்டல் விடுத்தாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஓசூர் முனீஸ்வர் நகர் உள்வட்ட சாலையிலுள்ள செங்கல் சூளை பகுதியில் கடத்தப்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸார் இருவரையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இதில் ஜான்பாஷா இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஓசூர் நகர் காவல்நிலையத்தில் பஷில்நாத் கொடுத்துள்ள புகாரில், தனது கணவரை ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்து உள்ளார்.

போலீஸார் கூறும் போது, கொலை செய்யப்பட்ட ஜான்பாஷா மீது ஓசூர் உட்கோட்ட காவல்நிலையங்களில் 25–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், கடத்தல் கும்பலில் மஞ்சு என்பவரை பிடித்து விசாரணை செய்து வருவதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்து உள்ளதாக என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in