ஏழை மாணவர்களும் சட்டம் பயின்று முத்திரை பதிக்கலாம்: உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை

ஏழை மாணவர்களும் சட்டம் பயின்று முத்திரை பதிக்கலாம்: உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: நேர்மை, கடின உழைப்பு இருந்தால் ஏழை, எளிய மாணவர்களும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், உயர் நீதிமன்ற முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான எஸ்.கோவிந்த் சுவாமிநாதன் நினைவு சட்டக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலமந்திர் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. பாலமந்திர் இணை செயலாளர் லீலா நடராஜன் வரவேற்றார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.அன்புமணி தலைமை வகித்தார்.

நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: ‘சட்டக் கல்விக்கான தொழில் வாய்ப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:

பொதுவாக, சட்டக்கல்வி என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இந்த எண்ணம் மாற வேண்டும். ஏழை, எளிய மாணவ, மாணவிகளும் சட்டம் படித்து சிறந்த ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும்.அதற்கு நேர்மையும், கடின உழைப்பும் தேவை. இன்றைய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். சட்டக் கல்வியால் சாதனை படைத்துள்ள மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

சட்டக் கல்வி என்பது வெறும் தொழில் வாய்ப்பு மட்டுமல்ல. அது சராசரி மனிதனை, சமூகத்துக்கு சேவையாற்றும் மனிதாபிமானம் உள்ள மனிதனாக மாற்றிக் காட்டும். மற்ற துறைகளைவிட, சட்டம் படித்தவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதையோடு, செல்வமும் கூடுதலாகவே கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், குழு விவாதத்தில் அவருடன், மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, என்.எல்.ராஜா, சி.மணிசங்கர், டி.மோகன், பி.நடராஜன் ஆகியோரும் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜெ.சரவணவேல், திவாகர், விஷால், சுக்ரித் பார்த்தசாரதி, யோகேஷ்வரன், சாருலதா, தன்வீர், அத்வைத், ப்ரணவ், ஷகானா, கார்த்திக், கிருஷ்ணஸ்ரீ உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்வில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிசு வழங்கி பாராட்டினார். நிறைவாக, சுஷ்மிதா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in