சென்னை கடற்கரை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை அருகே தடம்புரண்ட  கண்டெய்னர் தாங்கி செல்லும் காலி சரக்கு ரயிலின் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் ரயில்வே பணியாளர்கள்.
சென்னை கடற்கரை அருகே தடம்புரண்ட  கண்டெய்னர் தாங்கி செல்லும் காலி சரக்கு ரயிலின் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் ரயில்வே பணியாளர்கள்.
Updated on
1 min read

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கண்டெய்னர் தாங்கி செல்லும் காலி சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதனால், ஆவடி இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு கண்டெய்னர் தாங்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று வந்தது. அங்கு சரக்குகள் அடங்கிய கண்டெய்னர்களை இறக்கிவிட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை சரக்கு முனையத்தை நோக்கி கண்டெய்னர்கள் இல்லாத திறந்த காலி சரக்கு ரயில் மாலை 4.45 மணி அளவில் புறப்பட்டது. இந்த காலி சரக்கு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில், இந்த ரயிலின் இரண்டு பெட்டிகளில் உள்ள 8 சக்கரங்கள் தடம்புரண்டு, தரையில் இறங்கின. இதன் சத்தத்தைகேட்டு, ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு விரைந்துவந்து, தரையில் இறங்கிய சக்கரங்களை ரயில் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அருகில் இருந்த ஒரு தண்டவாளத்தில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வரும் ரயில்கள் ராயபுரத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி மெதுவாக இயக்கப்பட்டன.

தடம்புரண்ட கண்டெய்னர் அல்லாத திறந்த காலி சரக்கு ரயில் பெட்டிகள்.
தடம்புரண்ட கண்டெய்னர் அல்லாத திறந்த காலி சரக்கு ரயில் பெட்டிகள்.

அதே நேரத்தில், கடற்கரை முதல் ஆவடிக்கு வழக்கம்போல மின்சார ரயில்கள் இயங்கின. இதற்கிடையில், தடம்புரண்ட சரக்கு ரயிலின் சக்கரங்களை நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். இதையடுத்து, ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சரக்கு ரயில் சேவை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது. காலி சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டதால், ஒருமணி நேரத்துக்கு மேலாக மின்சார ரயில் சேவை பாதிப்படைந்தது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in