நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர்: உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாருக்கு பாராட்டு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர் உயிரை வாகன சோதனையில் இருந்த போலீஸார் காப்பாற்றியுள்ளனர். துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே கடந்த 6-ம் தேதி வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மதியம் 1 மணியளவில் சற்று தொலைவில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நெஞ்சைப் பிடித்தவாறு வாகனத்துடன் சாலையில் சரிந்து விழுந்தார். இதைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியபோது, மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார்.

உடனடியாக உதவி ஆய்வாளர் சக காவலர்கள் உதவியுடன் அந்த இளைஞரை தூக்கிச் சென்று அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இளைஞர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், வேலை காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையில் சரிந்ததும் தெரியவந்தது. தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார்.

வாகன ஓட்டியின் உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீஸாரையும் அப்பிரிவு துணை ஆணையர் (தெற்கு) பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in