

சென்னை: அனைத்து சட்ட உரிமைகளும் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சட்டப் பணிகள் தினம் இன்று (நவ.9) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அ. முகமது ஜியாவுதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப் பணிகள் அதிகாரச் சட்டம் கடந்த 1987 அக்.11-ம் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவ.9-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. சட்டப் பணிகள் அதிகாரச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேசிய சட்டப் பணிகள் ஆணையம் கடந்த 1995 டிச.5-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இது சமூகத்தின் ஏழை, எளிய மக்களுக்கும், பாமரர்களுக்கும் இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்கும், இருதரப்புக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி மக்கள் நீதிமன்றம் எனும் லோக்-அதாலத் மூலமாக சமரசம் மேற்கொள்ள வும் வழிகாட்டுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் மாநில சட்டப் பணிகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட நீதிபதியின் தலைமையிலும், தாலுகா அளவில் அந்தந்த தாலுகா நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில், சட்டசேவைகள் பல வகைகளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவைப் பொருத்தமட்டில் லோக் அதாலத், மத்தியஸ்தம் மற்றும் இலவச சட்ட உதவி போன்றமாற்றுத் தகராறு தீர்க்கும் முறைகள் மூலமாக சட்ட சேவைகளை தேசிய சட்டப் பணிகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இது இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கவும், உடனடி நீதி கிடைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தனித்துவ முயற்சி. சட்டப் பணிகள் அதிகாரச் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வழக்குத் தொடுப்பவர்களின் உரிமைகள் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவ.9-ம் தேதி தேசிய சட்டப் பணிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சட்டப் பணிகள் ஆணையம் மூலம் ஏழை, எளிய மக்கள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பையும், வசதிகளையும் சட்ட ரீதியாக உருவாக்கி கொடுப்பது அவசியமான ஒன்று. அதற்கு ‘யாவரும் நீதி பெறசம வாய்ப்பு’, ‘வானம் வீழினும் நீதி நிலவுக’ என்ற தாரக மந்திரத்தோடு மாநிலம், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் செயல்படும், சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை தேசிய சட்டப் பணிகள் தினமான இன்று யாவரும் அறியச் செய்வது அனைவரது கடமையும் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.