

சென்னை: கால்நடை மருத்துவக் கல்லூரியின் 121-வது ஆண்டு விழாவையொட்டி, கல்லூரி கட்டிட படத்துடன் கூடிய அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கடந்த 1903-ம் ஆண்டு அக்.1-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தியாவின் மூன்றாவது கால்நடை மருத்துவக் கல்லூரியான இதை தொடங்கி 121 ஆண்டுகள் ஆனதை நினைவூட்டும் வகையில் அஞ்சல் உறை வெளியிட திட்டமிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, சென்னை, வேப்பேரியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரியின் தலைவர் (பொ) ஆர்.கருணாகரன் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.என்.செல்வகுமார் முன்னிலையில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் அஞ்சல் உறையை வெளியிட்டார்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் செழுமையான பாரம்பரியம் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு உறையில் கல்லூரி கட்டிடத்தின் சித்திரம் மற்றும் அதன் சின்னத்தை அடிப்படையாகக் கொண்ட தபால் முத்திரை இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) வி.அப்பாராவ், கல்லூரியின் மாணவர் சங்க துணைத்தலைவர் ஏ.சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.