மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 381 கன அடி நீர் வரத்து

புழல் ஏரி | கோப்புப்படம்
புழல் ஏரி | கோப்புப்படம்
Updated on
1 min read

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 381 கன அடியாக இருக்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இம்மழையால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

அம்மழைநீர், இன்று (நவ.8) காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 381 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 130 கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி என, வந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது, பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 170 கன அடி கிருஷ்ணா நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 315 கன அடி நீர் பூண்டி ஏரியிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது.

இதனால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,415 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,706 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 487 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 90 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in