Published : 24 Jun 2018 09:32 AM
Last Updated : 24 Jun 2018 09:32 AM

அதிமுகவிலிருந்து 2 அமைச்சர், எம்எல்ஏ.க்கள் விலகலா?- ‘காற்றில் வரும் செய்தி’ என தினகரன் தகவல்

2 அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் சிலர் அதிமுகவிலிருந்து வெளியேறி எங்கள் கட்சியில் சேர்வதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தி. இதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று தினகரன் கூறியதாவது: தூத்துக்குடி, சென்னை-சேலம் பசுமை வழிச் சாலை போராட்டங்களில் ஈடுபடுவோர் சமூக விரோதிகள் இல்லை. தமிழக அரசு காவல்துறை மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. கோழி தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் மத்திய அரசு, தமிழக அரசை காப்பாற்றி வருகிறது. பெண்களை கேலி பேசும் எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படும் காவல்துறை, எங்கள் கட்சிக்காரர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது.

2 அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் சிலர் அதிமுகவிலிருந்து வெளியேறி எங்கள் கட்சியில் சேர்வதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தி. இதற்கு நான் பொறுப்பல்ல. சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தில் நில உரிமையாளர்களிடம் தமிழக அரசு பேச வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் தாராளமாக இத்திட்டத்தை செயல்படுத்தட்டும். இதைவிடுத்து, தமிழக அரசு இந்த அளவுக்கு அவசரம் காட்டுவதற்கான காரணம் தெரியவில்லை.

குட்கா விவகாரத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதில் தவறில்லை.

18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் நீதிமன்றத்தை நான் நம்புகின்றேன். விவசாயிகளான தமிழக முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழகத்தில் விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x