Published : 02 Jun 2018 07:58 AM
Last Updated : 02 Jun 2018 07:58 AM

பழவேற்காடு ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்க ரூ.8 கோடியில் செயற்கை பவளப் பாறைகள்: பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு

பழவேற்காடு ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்க ரூ.8 கோடியே 30 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகளும், சென்னை மாதவரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் மறுசுழற்சி முறையில் கொடுவா மீன்வளர்ப்பு தொழில்நுட்பப் பூங்காவும் அமைக்கப்படும் என்று பேரவையில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதிலுரையும், புதிய அறிவிப்புகளும் வருமாறு:

சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நிறுத்துமிடத்தில் உள்ள இட நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.5 கோடியில் படகு அணையும் தளம் 70 மீட்டர் அளவுக்கு நீட்டித்து அமைக்கப்படும். இதனால் கூடுதலாக 100 மீன்பிடிப் படகுகளை நிறுத்த இயலும்.

மேலும், மீன்பிடித் துறைமுகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மீன் ஏலமிடும் பகுதிகளை முழுமையாக பயன்படுத்திட வழிவகை ஏற்படும். பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிப் படகுகளின் இயந்திரங்களை 50 சதவீத மானியத்தில் வாங்குவதற்காக ரூ.2 கோடி வழங்கப்படும்.

மீன்குஞ்சு வளர்ப்பகம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் ரூ.1 கோடியே 7 லட்சத்தில் கடல் மீன்குஞ்சு வளர்ப்பகம் உருவாக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிரின் வாழ்வாதாரத்துக்காக ரூ.3 கோடியே 93 லட்சத்தில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் உபபொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் ரூ.1 கோடியில் விரிவுபடுத்தப்படும். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அரசு பழைய மீன் பண்ணையில் உள்ள சினைமீன் குளங்கள் ரூ.1 கோடியில் புனரமைக்கப்படும்.

சென்னை, மதுரையில் ரூ.20 லட்சத்தில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும். ராமேஸ்வரத்தில் ரூ.3 கோடியில் கடல் மீன் உணவகம், அலுவலகம், மீன்துறை ஆய்வு மாளிகை அமைக்கப்படும். மீன்களை சுகாதாரமான முறையில் கையாள்வதற்கு பாரம்பரிய மீனவர்களுக்கு ரூ.35 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தில் குளிர்காப்பு பெட்டிகள் வழங்கப்படும்.

நிவாரணத் தொகை உயர்வு

விபத்து அல்லது மீன்பிடிக்கும்போது இறந்தால் அல்லது காணாமல் போனால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், விபத்தால் ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், கை அல்லது கால் இழப்பு தவிர வேறு பலத்த காயம் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை மாதவரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் மறுசுழற்சி முறையில் கொடுவா மீன்வளர்ப்பு தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் ரூ.2 கோடியே 99 லட்சத்தில் ஒருங்கிணைந்த பன்னடுக்கு நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்ற புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.

பழவேற்காடு ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்க ரூ.8 கோடியே 30 லட்சத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில், ரூ.2 கோடியே 67 லட்சத்தில் மிதவைக் கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x