

காஞ்சிபுரம்: பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டபோது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகேபரந்தூரில் அமைகிறது. இதற்காக நிலம் எடுக்கும் பணிகளில் அரசுஅதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்வாய் கிராமத்தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியின்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் மீண்டும் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியபோது நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி கஸ்தூரி (60)இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மகளிர் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் கணக்கெடுக்க வந்த அலுவலர்கள் அந்தப்பணியை நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.
அதிகாரிகள் தற்காலிகமாக திரும்பிச் சென்றாலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை அரசும், அலுவலர்களும் தீவிரப்படுத்தி வரும் நிலையில் பரந்தூரைச் சுற்றியுள்ள நெல்வாய், ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.