

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பேசிய அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. முதற்கட்டமாக 10,762 ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இதில் 72,711 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு முதற்கட்டமாக தற்போது காலியாக உள்ள 10,762 ஆசிரியர் பணியிடங்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கல்விச் சூழ்நிலையில் மாற்றம்
இந்த வெயிட்டேஜ் முறையில் பிளஸ் டூ, கல்லூரி, பி.எட். ஆகிய படிப்புகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அரசு கூடுதல் மதிப்பெண் வழங்குகிறது. இன்றைய கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக பல மாணவர்கள் தற்போது பள்ளி தேர்வுகளில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் வாங்குகின்றனர். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்வி சூழ்நிலையில் பிளஸ் டூ தேர்வில் 800 மதிப்பெண் எடுப்பதே அரிதாக இருந்தது.
மதிப்பெண் அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும்
இதனால் தற்போது அரசு அறிவித்துள்ள வெயிட்டேஜ் பணி நியமனத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் டூ, கல்லூரி, பி.எட். படித்த ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆதலால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்க வேண்டும்.
வெயிட்டேஜ் முறை பணி நியமனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை வலியுறுத்தும் அரசாணை எண் 71 ரத்து செய்யப்பட வேண்டும். கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர் களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப் 1- ம் தேதி சென்னையில் பேரணி நடைபெற உள்ளது.
தமிழக அரசு வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.