Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

ஆவடியில் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் மார்க்கெட் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு செய்வதால், தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ‘தி இந்து’உங்கள் குரல் பகுதியில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் புதிய ராணுவ சாலையில் மார்க்கெட் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தை ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ‘தி இந்து’உங்கள் குரல் பகுதியில் தெரிவித்ததாவது:

ஆவடி மார்க்கெட் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பூந்தமல்லி, பெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் என தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பேருந்து நிறுத்தத்தை ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் போகிறது. அத்துடன், ரயில் நிலையம் செல்பவர்கள் மற்றும் கடைகளுக்குச் செல்பவர்கள், இப்பேருந்து நிறுத்தத்தை ஒட்டியுள்ள நேரு பஜார் பாதையை பயன்படுத்துகின்றனர். இவர்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுகின்றனர். பல நேரங்களில் குறித்த நேரத்துக்கு ரயிலை பிடிக்க முடியாமல் போகிறது.

இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இருப்பதில்லை. பேருந்துகளும் பேருந்து நிறுத்தம் அருகே வந்து நிற்காமல் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் அலைக்கழிப்பு ஆளாகின்றனர்.

எனவே, பேருந்துகள் நின்று செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். இதன் மூலம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். போக்குவரத்து காவல் துறையினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x