பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்ததாக புகார்; ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட்

பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்ததாக புகார்; ஆசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பரமக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் விலங்கியல் முதுகலை ஆசிரியராக 2007-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ல் சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில் எனக்கு குற்றச்சாட்டு குறிப்பானை வழங்கப்பட்டது. பின்னர், எனக்கு ஓராண்டுக்கு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளேன்.

இதற்கிடையே, நான் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார்கள் அளிக்கப்பட்டன. இதனடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர். ஆனால், என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. தற்போது பள்ளி நிர்வாகம் என் மீது போலீஸில் புகார் அளித்துள்ளது. பின்னர், என்னை பணியிடை நீக்கம் செய்தனர். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "மனுதாரர் மாணவிகளிடம் சாதி ரீதியாகப் பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக 34 மாணவிகள் மற்றும் 8 ஆசிரியைகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரித்து அளித்த அறிக்கையின்படி, மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்தனர். பின்னர், மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அதன்பேரில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், "பள்ளி நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின்பேரில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கை ஏற்புடையதல்ல" என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in