உணவுப் பொருள் கடத்தல் | 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் - உணவுத் துறை செயலர் தகவல்

உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
Updated on
2 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாய விலைக் கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியாளர்களிடம் கடையில் இருப்பு உள்ள பொருட்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முறையாக பொருட்களை வழங்கப்பட்டுள்ளதா என பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது, கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இதையடுத்து, அவரது செல்போனை வாங்கிய ராதாகிருஷ்ணன் அந்த பெண் ஊழியருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனால், ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், வாயலூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளிலும் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், பொதுவிநியோக திட்ட துணை பதிவாளர் சற்குணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறாதா என ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பணிகள் காரணமாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது தாமதமானது. தற்போது, அனைத்துப் பகுதியிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதால், நியாய விலைக் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.

அரசிக் கடத்தலை தடுப்பதற்கு டிஜிபி-யான சீமா அகர்வால் தலைமையில் 4 எஸ்பி-க்கள் கொண்ட 500 பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். இதில் குறிப்பாக, கேரளா மாநில எல்லையோர 13 மாவட்டங்கள், ஆந்திரா மாநில எல்லைப் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அரிசிக் கடத்தலை தடுக்க நவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில், உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 ஆயிரத்து 802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடத்தல் சம்பவம் தொடர்பாக 9 ஆயிரத்து 543 பேர் கைது செய்யபபட்டுள்ளனர். இதில், 72 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in