சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு: ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு

வைகையின் முக்கிய துணை ஆறான கொட்டக்குடி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம். இடம்: போடிமெட்டு சாலை அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணை. படம்: என்.கணேஷ்ராஜ்.
வைகையின் முக்கிய துணை ஆறான கொட்டக்குடி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம். இடம்: போடிமெட்டு சாலை அணைப்பிள்ளையார் கோயில் தடுப்பணை. படம்: என்.கணேஷ்ராஜ்.
Updated on
1 min read

தேனி: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.

வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்து பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது. மேலும், வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, வராகநதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

இந்த ஆறுகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலும் மழைக் காலங்களில் நீர்வரத்து இருக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 62.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 63.50 அடியாக (மொத்த உயரம் 71) உயர்ந்தது.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு விநாடிக்கு 705 கன அடியாக இருந்த அணைக்கான நீர்வரத்து இன்று 2,862 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், முல்லை பெரியாறு அணையில் இருந்தும் 1,100 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in