

குன்னூர்: குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்தன. அவற்றை வருவாய் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனிடையே குன்னூர் ஆப்பில் பீ அருகே உள்ள ஜாய்ஸ் பில்டிங் பகுதியில் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது.
இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதே போன்று பெட்போர்ட் பகுதியில் புதிதாக குடியிருப்பு கட்ட தடுப்பு சுவர் உயரமாக எழுப்பப்பட்டு வந்த நிலையில் கன மழை காரணமாக அதன் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்திற்கு முறையாக நகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
தடுப்புச் சுவர் இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.