Published : 12 Jun 2018 08:28 am

Updated : 12 Jun 2018 08:28 am

 

Published : 12 Jun 2018 08:28 AM
Last Updated : 12 Jun 2018 08:28 AM

இணைச்செயலாளர்கள் நேரடி நியமனம்: மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச்செயலாளர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்: தனியார் நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து மத்திய அமைச்சகங்களில் உள்ள இணைச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்பு பல்வேறு பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் இதர அகில இந்திய சர்வீஸ் அதிகாரிகளின் திறமையை கொச்சைப்படுத்தும் செயலாகும். இதன் மூலம், அரசின் ரகசியம் இனி தனியார் கையில் தாராளமாக போய் சேரும் சூழ்நிலை ஏற்பட்டு நாட்டுக்கு பேராபத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு கண்டிக்கத் தக்கது.

எனவே, இணைச் செயலாளர் நிலையில் பணியாற்ற தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப் பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மத்திய அரசு தனது நிர்வாகத்தில் நிதி, வருவாய், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளின் இணைச் செயலாளர் பதவிக்கு கார்ப்பரேட், பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசு பணிகளில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதோடு, மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும், மத்திய அரசின் அனைத்துச் சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களிலும், சில மாநில அரசு பதவிகளிலும் பணிபுரியும் பாஜகவின் மனப்போக்கைக் கொண்டவர்களை மத்திய அரசு பணிகளில் அமர்த்தவே இந்த அறிவிப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இந்த முறைகேடான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஏற்கனவே மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் பாஜகவைச் சார்ந்தவர்கள் பலர் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மூத்த அதிகாரிகள் பணிபுரியும் இணை செயலாளர் பொறுப்புக்கும் சட்டவிரோதமாக பாஜக தனது ஆட்களை நியமிக்க முயற்சித்து வருவது அரசுத்துறைகளை சீரழிக்கும் மோசமான செயல்.

எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணை செயலாளர் பொறுப்புகளில் பணியமர்த்த வேண்டும். தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author