Published : 20 Aug 2014 08:23 AM
Last Updated : 20 Aug 2014 08:23 AM

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க முடிவு: சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதுகுறித்து தலைமை முக்கிய முடிவெடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தால் திமுக தலைமைக்கும் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அழகிரியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கடந்த மார்ச்சில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘ஸ்டாலினைப் பற்றி அழகிரி சொன்ன வார்த்தை களைக் கேட்டு என் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது’ என்று தெரிவித்தார்.

இதன்பின், ஸ்டாலினின் பொறுப்பில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த திமுக, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி களிலும் தோல்வியடைந்தது. இந்தத் தேர்தலின்போது திமுக வுக்கு எதிராக கருத்துகளை அழகிரி கூறிவந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவுகளாலும் அழகிரி நீக்கப்பட்டதாலும் கனிமொழி தரப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்காததாலும் தோல்வி ஏற்பட்டதாக ஆளுக்கொரு கருத்தை கூறினர்.

இதற்கிடையே, அழகிரியின் முக்கிய ஆதரவா ளர்களாக இருந்த எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன் உள்ளிட்டோர் ஸ்டாலின் பக்கம் தாவினர்.

தற்போது திமுக கிளை களுக்கு அமைப்புத் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளராக இருந்த ஸ்டாலினின் ஆதரவாளர் கல்யாணசுந்தரம் திடீரென கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஸ்டாலினை 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முதல்வர் வேட்பா ளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி திமுக தலைவரிடம் கடிதம் கொடுத்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

அழகிரி இல்லாத நிலையிலும் கட்சிக்குள் பிரச்சினைகள் எழுந் தது திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது. இதனால் தலைமைக்கு எதிரானவர்கள், ஆதரவாளர்கள்போல் இருப்ப வர்களின் பட்டியல் ரகசியமாக தயாரிக்கப்பட்டது. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் இதே நிலை நீடித்தால், திமுக எதிர்காலம் மோசமாகி விடும் என்று கருணாநிதி கருதுகிறார். எனவே, மீண்டும் கட்சியில் புத்துணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க முயன்றுள்ளார். 5 நாட்களாக சென்னையில் இருந்தும் அவரால் கருணாநிதியை சந்திக்க இயலவில்லை. ஆனாலும், இரு தரப்புக்கும் இடையே குடும்பத் தினர் சிலரே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சுமுக முடிவு எடுக்கப்பட்டதாகவும் அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி ஒப்புக்கொண்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அழகிரி தன் கைப்பட விளக்கக் கடிதம் ஒன்றை எழுதித் தரவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

‘அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கட்சித் தலைமை நிபந்தனை விதித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருணாநிதியின் இந்த முடிவில் ஸ்டாலினுக்கும் உடன்பாடு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. கட்சியின் அமைப்புத் தேர்தல் நடக்கும் இந்நேரத்தில் அழகிரியை சேர்த்தால் தொண்டர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படக்கூடும். அதனால் தேர்தலுக்குப் பிறகு எந்த முடிவையும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் தரப்பில் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x