

உதகை: தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைகாரணமாக, சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
அதேபோல, நீலகிரி மலை ரயிலில் செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் உதகை ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெரிசலைத் தவிர்க்க இன்று (நவ.3) உதகை - குன்னூர் இடையேசிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல, பிரபல சுற்றுலாத் தலங்களான சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தன. கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை ரசித்துச் சென்றனர். மேலும், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.