“ஆட்சியில் பங்கு என விஜய் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால்…” - பொன் ராதாகிருஷ்ணன் 

பொன் ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்)
பொன் ராதாகிருஷ்ணன் (கோப்புப் படம்)
Updated on
1 min read

நாகர்கோவில்: “ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல் முறையாக விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் களப்பணியாற்ற வேண்டும்.அதற்கு முன்பே இப்படி கூறுவது ஆணவத்தை காட்டுவதாகவும் உள்ளது. விஜய் மாநாடு தான் திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது” என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறாலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “புரிந்து கொள்ள முடியாத நிலையில் மாநாடு நடத்தி முடித்து உள்ளார் நடிகர் விஜய். அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். குளத்தில் குளிக்க சென்ற பிறகு உடலில் தண்ணீர் பட கூடாது. ஆனால் குளிக்க வேண்டும் என்றால் கேலிக்குரிய ஒன்று. அது போல இருக்கும் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.இது அவருக்கும் நல்லதல்ல. தமிழகத்திற்கும் நல்லதல்ல. ஆட்சியில் பங்கு பெறுவோம் என சிலர் கூறி வருகின்றனர். அந்த நேரத்தில் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று முதல் முறையாக விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக விஜய்க்கு பாராட்டுகள்.

அதே நேரத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் களப்பணியாற்ற வேண்டும்.அதற்கு முன்பே இப்படி கூறுவது ஆணவத்தை காட்டுவதாகவும் உள்ளது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது மக்கள் மத்தியில் எழுச்சி இருந்தது. என்டிஆர் ஆந்திராவில் கட்சி தொடங்கிய போது அங்குள்ள மக்கள் அவரை வாழும் கண்ணனாக பார்த்தார்கள். கடவுளுக்கு நிகராக அழைக்கப்பட்டார். ஆகவே விஜய் அவராகவே இருந்து அரசியல் நடத்தட்டும். தமிழக அரசியல் உறுதி அற்ற நிலையில் உள்ளது .ஆளும் திமுக மீது ஏராளமான புகார் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிமுக ஆட்சிக்கு வருவதிலும் குழப்பம் உள்ளது. தற்போது விஜய் மாநாடு தான் திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in