Published : 07 Jun 2018 11:20 AM
Last Updated : 07 Jun 2018 11:20 AM

நீட் தேர்வுக்கு மற்றொரு பலி: திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள உத்தமர்கோவில் திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன். இவருடைய மகள் சுபஸ்ரீ (17). துறையூர் சௌடாம்பிகா பள்ளியில் பிளஸ் 2 படித்த சுபஸ்ரீ 907 மதிப்பெண் எடுத்திருந்தார். அண்மையில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் சுபஸ்ரீ 24 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறியிருந்தனர். இருந்தாலும் சுபஸ்ரீ தொடர்ந்து மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். பின்னர் இரவு 10.30 மணியளவில் கண்ணன் வீட்டின் வெளிக் கதவை அடைத்துவிட்டு வரச் சென்றார். அந்த நேரத்தில் படுக்கை அறைக்கு சென்ற சுபஸ்ரீ கதவை தாழிட்டுள்ளார். சப்தம் கேட்டு வந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் பின்புறமாகச் சென்று ஜன்னல் கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அங்கு சுபஸ்ரீ தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறைக் கதவை உடைத்து சுபஸ்ரீயை பால்பண்ணை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுபஸ்ரீ உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த டோல்கேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x