Published : 03 Jun 2018 09:43 AM
Last Updated : 03 Jun 2018 09:43 AM

வாக்களிக்க தபால் ஓட்டு வசதி வழங்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு வசதி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக, செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக, அவர்களின் கருத்துகளைக் கேட்குமாறு மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இதில் பங்கேற்று கருத்துகளைக் கேட்டறிந்தார்.

இதில் மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பினர் தெரிவித்த முக்கிய கருத்துகள் வருமாறு:

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகிறது. அதற்கு பதிலாக நிரந்தரமாக சாய்வுதளம் அமைக்கலாம்.

மாற்றுத் திறனாளிகளில் பலர் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் வாக்களிக்கவே வர முடியாது. அதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு வசதியை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நடமாடும் வாக்குச் சாவடியை அமைத்து, மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்க உதவ வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் பல சக்கர நாற்காலிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் தெரிவித்தன.

உரிய நடவடிக்கை

இதைத் தொடர்ந்து பேசிய மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, “அனைவரின் கோரிக்கைகளும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தலைமைத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையர் வி.அருண்ராய், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ப.பொன்னையா, தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எ.சிவஞானம், சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x