அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. பதிவு: சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை

அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. பதிவு: சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை
Updated on
2 min read

சென்னை: சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15-ம் தேதி கனமழை பெய்தது. அன்றைய தினமே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன் பிறகு, வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவான நிலையில், தமிழகம் நோக்கி வீசவேண்டிய ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று, புயலின் பக்கம் ஈர்க்கப்பட்டு, ஆந்திரா, ஒடிசா நோக்கி சென்றது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. சில நாட்களாக பகல் நேரத்திலேயே பனிப்பொழிவு நிலவியது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில்<br />தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

இந்நிலையில், கிழக்கு திசை காற்று நேற்று வீசத்தொடங்கிய நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 11.45 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், மாநகர் பகுதியிலும் பரவி, கனமழையாக கொட்டித் தீர்த்தது. பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அண்ணா நகரில் 9 செ.மீ., அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூரில் 6 செ.மீ., அம்பத்தூர், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

திடீர் கனமழை காரணமாக தேங்கிய தண்ணீரில் மிதக்கும்<br />வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.<br />| படம்: ம.பிரபு |
திடீர் கனமழை காரணமாக தேங்கிய தண்ணீரில் மிதக்கும்
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
| படம்: ம.பிரபு |

இதன் காரணமாக, அண்ணா நகர், கே.கே. நகர், கிண்டி, அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வடியவைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். திடீரென பெய்த கனமழை காரணமாக, ஜவுளி கடைகளில் கடைசி நேர தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனையும் பாதிப்படைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in