வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கொச்சி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

இந்தப் பேரழிவிலிருந்து தப்பியவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வயநாடு பேரிடர் விவகாரத்தை கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், வி.எம்.சத்யம் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வயநாடு பேரிடரை ​​தேசியப் பேரிடராக அறிவிக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரம் கொண்ட குழு ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோல் மாநில அரசு தரப்பில், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கும் திட்டம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை என செய்திகள் வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்தத் தொகையை கருவூலம் அல்லது வங்கிக் கணக்கு மூலம் வழங்கும் ஏற்பாடுகளை செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in