

திருச்சி: அந்தநல்லூரில் காவிரி படித்துறையில் கிடந்த, சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சரை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் வடக்கு பகுதியில், கரூர் சாலையில் தீர்த்தநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "காவிரி ஆற்றின் படித்துறையில் கிடந்தது டம்மி ராக்கெட் லாஞ்சர்போல உள்ளது. இது காவல் துறையின் அறிவியல் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் தகவல்களைக் கொண்டுதான், கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குறித்த முழுவிவரம் தெரியவரும். இந்த ராக்கெட் லாஞ்சர் இங்கு எப்படி வந்தது என்பது குறித்து தற்போது விசாரித்து வருகிறோம்" என்றனர்.