Published : 11 Jun 2018 11:24 AM
Last Updated : 11 Jun 2018 11:24 AM

மத்திய அரசு பணிகளில் இந்துத்துவா சக்திகளை அமர்த்த சதி: வைகோ குற்றச்சாட்டு

 இந்துத்துவா சக்திகளின் மனப்போக்கைக் கொண்டவர்களை மத்திய அரசு பணிகளில் அமர்த்தவே மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிடாத அநீதிகளை, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு சட்ட விதிகளையும், மரபுகளையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, பின்னர் தேர்முகத் தேர்வு மூலம் தகுதி பெற்றோரை பணிகளுக்குத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய பயிற்சியைக் கொடுத்து வந்தது.

இந்த முறையை அடியோடு மாற்றி, குருகுலப் பயிற்சியைப் போல சிறப்புப் பயிற்சி என்ற பெயரால் அரசு விரும்புகிறவர்களுக்கு அதிக மதிப்பெண்களைக் கொடுத்து, பணியிடங்களில் அமர்த்த முற்படும் முயற்சிக்கு நேர்மையாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் அனைவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு தனது நிர்வாகத்தில் நிதித்துறை, வருவாய்த் துறை, பொருளாதாரத் துறை, வேளாண்மை, கூட்டுறவு, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுச் சூழல், வனத்துறை, மரபுசாரா எரிசக்தித்துறை, விமானப் போக்குவரத்து, வணிகத்துறை உள்ளிட்ட துறைகளின் இணைச் செயலாளர் பதவிக்கு பெருநிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு பணிகளிலும் இருப்பவர்கள் ஜூன் 15 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மூன்று வருடம் முதல் ஐந்து வருடம் அவரை அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல், 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை மாதச் சம்பளமும், இதர படிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துச் சலுகைகளும் பெறுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிபுணர்களை இப்பணிகளுக்கு நியமனம் செய்யப் போகிறோம் என்று செய்துள்ள அறிவிப்பு, மத்திய அரசின் பணி நியமனங்களுக்கான சட்ட விதிகள் இதுவரை பின்பற்றப்பட்டுவந்த நடைமுறை அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. சமூக நீதியைச் சாகடித்து, சங் பரிவாரின் கொள்கைத் திட்டத்தைச் செயல்படுத்தும் பாசிச அரசாக மத்திய அரசு இயங்குகிறது.

பெருநிறுவனங்களிலும், சில மாநில அரசு பதவிகளிலும் பணி செய்கின்ற பாஜகவின், குறிப்பாக இந்துத்துவா சக்திகளின் மனப்போக்கைக் கொண்டவர்களை மத்திய அரசு பணிகளில் அமர்த்தவே இந்த மோசடியான அறிவிப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இந்த முறைகேடான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அனைத்து முற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும், சமூக நீதியில் அக்கறைகொண்டோரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும், கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x