Published : 25 Jun 2018 08:48 AM
Last Updated : 25 Jun 2018 08:48 AM

கவிஞர் பிறைசூடன் எழுதிய ‘மஹா பெரியவா’ கவிதை நூல் வெளியீடு

மஹா பெரியவரின் ஆன்மிக சேவைகளை விளக்கி, கவிஞர் பிறைசூடன் எழுதியுள்ள ‘மஹா பெரியவா’ கவிதை நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

நிவேதிதா பதிப்பகம் சார்பில் கவிஞானி பிறைசூடன் எழுதிய ‘மஹா பெரியவா’ கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. நிவேதிதா பதிப்பக உரிமையாளர் தேவகி ராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். பாஜக மூத்த தலை வர் இல.கணேசன் எம்.பி.,நூலை வெளியிட, வாணி மஹால் தலைவர் டெக்கான் என்.கே.மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

ஆன்மிக சேவை

விழாவில் இல.கணேசன் பேசியதாவது:

‘மஹா பெரியவா’ கவிதைத் தொகுப்பு நூலின் தொடக்கமே சிறப்பாக இருக்கிறது. இதில், மஹா பெரியவாளின் ஆன்மிக சேவை குறித்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உள்ளத்தில் இருந்து பீறிட்டு வரக்கூடிய வார்த்தைகளாகத்தான் இந்தக் கவிதைகளைப் பார்க்க முடிகிறது. மஹா பெரியவரின் பெருமையைப் படிப்பதற்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கவிஞர் பிறைசூடனின் கவிதைகளை விரும்பிப் படிப்பவன் நான். எங்களது ‘பொற்றாமரை’ அமைப்பு சார்பில் அவருக்கு சிறந்த கவிஞர் விருதையும் அளித்துள்ளோம். அது எந்த அளவுக்கு தகுதியானது என்பது இந்த நூலைப் படித்த பிறகு தெரிகிறது. மறைந்த காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றியும் கவிதை நூல் எழுத வேண்டும் என்று பிறைசூடனைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஞானப்பிழம்பு

கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவர் முனைவர் கே.பி.வித்யாதரன் பேசியதாவது: மஹா பெரியவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால், எத்தனையோ பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கின்றன. விருச் சிக ராசி, அனுஷம் நட்சத்திரத்தில் அந்த மகான் அவதரித்துள்ளார். ஞானப்பிழம்பாக இருக்கக்கூடியது அனுஷ நட்சத்திரம். ஏகப்பட்ட கஷ்டங்கள் வந்து பலரும் அவதியுறுவதைப் பார்க்கிறோம். அப்போதெல்லாம், ‘காஞ்சி மஹா பெரியவா ஜாதகத்தை வைத்து பூஜை செய்யுங்கள். உடனே கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்’ என அறிவுறுத்தியுள் ளோம்.

வேதங்களின் ஒரு பகுதியாக ஜோதிடம் இருக்கிறது என்று அவரது ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அவரது ஜாதகத்தில் உள்ள கட்டங்களைப் பார்க்கும்போதே, நமக்குள் ஆனந்தம் உருவாகிறது. தவசி யோகமும் அவரது ஜாதகத்தில் அமைந்திருக்கிறது. 10-ம் இடத்தில் சூரியன், புதன், குரு ஆகிய 3 கிரகங்களும் இருக்கின்றன. இந்த 3 கிரகங்களும் இருப்பவர்கள் ஞானி, யோகி ஆவார்கள்.

அதியோகம், பிரம்மயோகம்

அதியோகமும் பிரம்மயோக மும் அவரது ஜாதகத்தில் இருக்கிறது. எத்தனையோ முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருக்கு அனைத்தும் தெரிந்தாலும், நம்மிடம் சின்னதாக பரீட்சை செய்வார். மஹா பெரியவாளின் ஆன்மிக சேவைகள் பற்றியும், அவரது ஒவ்வொரு அசைவுகளைப் பற்றியும், இந்தப் புத்தகத்தில் கவிஞர் பிறைசூடன் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கரணை ஸ்ரீசங்கரபால வித்யாலயா பள்ளி தாளாளர் வேதாசுப்பிரமணியன், ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், ஆன்மிக சொற்பொழிவாளர் முத்துக்குமார சுவாமி வாழ்த்துரை வழங்கினர். பிறைசூடன் ஏற்புரை வழங்கினார். இசையமைப்பாளர் தயானந்த் பிறைசூடன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x