Published : 12 Jun 2018 08:41 AM
Last Updated : 12 Jun 2018 08:41 AM

நித்தியானந்தா பீடத்துக்கு சென்ற மனைவியை காணவில்லை: மீட்டு தரக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் கணவர் மனு

பெங்களூரு நித்தியானந்தா பீடத்துக்கு சென்ற மனைவியை காணவில்லை எனவும், அவரை மீட்டுத் தரக்கோரியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ராமசாமி என்ற விவசாயி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரம்: ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயி. பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்துக்கு தியான வகுப்புக்கு சென்ற எனது மனைவி, மகன் வீடு திரும்பவில்லை என கடந்த மார்ச் 26-ம் தேதி புகார் மனு அளித்திருந்தேன். இதையடுத்து போலீஸார் என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்

ஆனால், என் மனைவி அத்தாய் (40) பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ.5 லட்சமும், நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும், நகை அடமான கடன் ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளிநபர் கடன் உள்ளது. வங்கி அதிகாரிகள் என்னிடம் நேரில் அழைத்து பணத்தை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இந்தப் பணம் முழுவதையும் 21 நாள் தியான வகுப்புக்கு எனது மனைவி எடுத்துச் சென்று செலவு செய்துவிட்டார். இதனால் கடந்த 8 மாதங்களாக நான் கடன் தொல்லையாலும், உணவின்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே மனைவியை கண்டறிந்து மீட்டு வந்து கடனை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x