சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தொடங்கிய ரயில் சேவை: பயணிகளின் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தொடங்கிய ரயில் சேவை: பயணிகளின் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்
Updated on
1 min read

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) காலை முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை தொடங்கியது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதால், பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், பார்க் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாததால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது. இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதற்கிடையில், ஓராண்டு கடந்தும் 4-வது பாதை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் வழக்கமான மின்சார ரயில் சேவை இன்று (அக்.29) காலை முதல் தொடங்கியது.

14 மாதங்களுக்கு பிறகு, ரயில் சேவை தொடங்கியதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த மார்க்கத்தில் தினசரி 90 ரயில் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பார்க் டவுன் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், அந்த நிலையத்தில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மின்சார ரயில்கள் நிறுத்தப்படாது என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in