“இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் பண்டிகை தீபாவளி” - இந்து முன்னணி

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் | கோப்புப்படம்
காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் வளம் சேர்க்கும் நமது தீபாவளி திருநாள், இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம், தான் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி திருநாளில் இறைவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் வழங்கிட பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறோம். தீபாவளித் திருநாள் சுமார் 300 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களை வளம்பெற வைக்கும் உன்னத பண்டிகை.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் ஈடுபடும் நெசவுத் தொழிலுக்கு உறுதுணையான பண்டிகை தீபாவளி ஆகும். சிவகாசி முதலான வறண்ட பகுதிகளில் மக்களின் உழைப்பால் உருவாகும் பட்டாசு குழந்தைகளை மகிழ்விப்பது மட்டுமல்ல, சிவகாசிப் பகுதிவாழ் பல லட்சகணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.

இத்தகைய திருவிழாவை எத்தனையோ வெளிநாட்டு சக்திகள் பல வகைகளில் சீர்குலைக்க சதி செய்கின்ற போதிலும் அவற்றை நமது நம்பிக்கை மூலம் முறியடித்து வெற்றி பெற்றே வந்து உள்ளோம். அதுவே இந்து தர்மத்தின் வெற்றி ஆகும். எல்லா தரப்பு மக்களின் வாழ்விலும் வளம் சேர்க்கும் நமது தீபாவளி திருநாள் இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. எல்லோருக்கும் இந்து முன்னணி சார்பில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in