

சென்னை: பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், திருவான்மியூர், பாரிமுனை உள்ளிட்ட வணிக வீதிகளில் கூட்டம் அலை மதுகிறது.
நேற்று முன்தினம் கடைசி ஞாயிறு என்பதால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புணிகளில் ஈடுபட்டனர்.
காலை 6 முதல் 7 மணிவரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கி உள்ளார். இதுஒருபுறம் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகள், குடிசை பகுதிகள் உள்ள பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், உயிர் சேதம் இன்றி உடனடியாக தீயை அணைக்கும் பொருட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசர உதவி எண்கள் மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண் 101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.