

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் இருவர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு பதிலளிக்க விசாரணை அதிகாரியான கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004 ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப் பட்டன.
இந்த வழக்கில் பழனிச்சாமி ஆயுள் தண்டனையை எதிர்த்தும்,சரஸ்வதி, சாந்தலெட்சுமி, தாண்டவன், ஆர்.பாலாஜி ஆகியோர் தங்களுக்கு கும்கோணம் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், ‘கீழ் நீதிமன்றம் ஊகம் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது. எங்களது பணி, கடமை என்னவென்று அறியாமல் எங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை கீழ் நீதிமன்றம் ஏற்கவில்லை. பள்ளியின் உரிமம் புதுப்பித்தலுக்கும் தீ விபத்து சம்பவத்துக்கும் தொடர்பு கிடையாது. இருப்பினும் எங்களுக்கு கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.