

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு இந்த முறையாவது நிறைவேற்றுமா என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று செய்தி, விளம்பரம் மற்றும் சுற்றுலா, கலை, பண்பாட்டு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்க உள்ளது. இந் நிலையில், கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதில் அரசுக்கு தயக் கம் என்ன? பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய நிதியை பெறுவதிலும், இதர நிதிகளை பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு இம்முறையாவது நிறைவேற்றுமா? வீட்டுவசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் வெறும் 0.015 சதவீதம் மட்டுமே சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. பண்பாட்டு பெருமை மிக்க தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சுற்றுலா மூலம் வேலைவாய்ப்புகள் பெருகவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதியை அரசு ஒதுக்குமா?
இவ்வாறு அறிக்கையில் கமல் கேள்விகளை எழுப்பியுள்ளார்.