Published : 05 Jun 2018 10:51 AM
Last Updated : 05 Jun 2018 10:51 AM

தண்டவாளம் தயார் நிலையில் இருந்தும் காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே ரயில் இயக்குவதில் தாமதம்: சமூக விரோதிகளின் புகலிடமாகும் ரயில் நிலையங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதைப் பணி கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்தும், அவ்வழித்தடத்தில் புதிய ரயில்கள் இயக்கப்படாததால் அங்குள்ள ரயில் நிலையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.

காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே 187 கிமீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை ரூ. 1700 கோடி மதிப்பில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2012 ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை 73 கிமீ அகல ரயில் பாதை பணி ரூ.700 கோடியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. தமிழகத்தில் கடைசியாக மாற்றப்பட்ட மீட்டர் கேஜ் பாதை இதுவாகும்.

மீதமுள்ள பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இடையேயான அகல ரயில் பாதை பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித் தடத்தில் 255 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையம் அதற்கான நடைமேடையும் கண்டனூர், பெரியகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, வாளரமாணிக்கம், வல்லவாரி, பேராவூரணி, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டையில் புதிய ரயில் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் டிராலி மூலம் சோதனை நடத்தப்பட்டது. மார்ச் 1-ம் தேதி இரண்டு பெட்டிகள் கொண்ட சோதனை ரயில் இயக்கப்பட்டது. பட்டுக்கோட்டை - காரைக்குடி 73 கிமீ தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து சோதனை செய்தனர். மார்ச் 30-ம் தேதி சிறப்பு பயணிகள் ரயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு 2 மாதத்துக்கும் மேலாகிவிட்டன. இருப்பினும் இன்னும் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறும்போது, “காரைக் குடி - பட்டுக்கோட்டை இடையே ரயில் போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும். இந்த ரயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு இயக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து பேராவூரணி முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன் கூறும்போது, “பட்டுக்கோட்டை- ஒட்டங்காடு, பேராவூரணி போன்ற ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்தும் தொடர்ந்து இயங்காததால், அங்கு ஆடு, மாடு, நாய்கள் தஞ்சமடைந்து கட்டிடங்கள் பாழடைந்து வருகின்றன. பல கோடி ரூபாய் செலவு செய்தும் பயனில்லாமல் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, “பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே ரயில் இயக்குவது தொடர்பாக இன்னும் ரயில்வே வாரியத்திடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை.

இந்த பாதையில் ரயில் இயக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x