நீதித்துறை சிறப்பாக செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அழைப்பு

நீதித்துறை சிறப்பாக செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அழைப்பு
Updated on
1 min read

மதுரை: ‘நீதித்துறை சிறப்பாகச் செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நேற்று முதல் அமர்வில் வழக்குகளை விசாரித்தார். முன்னதாக, தலைமை நீதிபதிக்கு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், மகா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், எம்பிஏ பொதுச் செயலாளர் வெங்கடேசன், பார் அசோசியேஷன் தலைவர் ஐசக் மோகன்லால், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆனந்தவல்லி ஆகியோர் பேசினர்.

பின்னர், தலைமை நீதிபதி பேசியதாவது: தமிழ் அன்னைக்கும், மதுரை மண்ணுக்கும் முதல் வணக்கம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. உயர்ந்த கலாச்சாரம், பண்பாடு, தூங்கா நகரம், மீனாட்சியம்மன் கோயில், மனம் பரப்பும் மதுரை மல்லி, ஜல்லிக்கட்டு என பல்வேறு சிறப்புகளை கொண்ட மாநகரம் மதுரை.

மதுரையை ஏதென்ஸ் போன்ற பழமையான நகரம் என அழைக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். மதுரைக்கு பலமுறை வந்துள்ளேன். மதுரை மக்களின் பாசமும், அன்பும் என்னை கவர்ந்துள்ளது. சென்னை, மும்பை நீதிமன்றங்கள் மிகவும் பழமையானது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 7 பேர் மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து வந்தவர்கள். அந்த பட்டியலில் நானும் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி.

சென்னை உயர் நீதிமன்றம் 150 ஆண்டுகளில் பல்வேறு நீதித்துறை வல்லுநர்களை உருவாக்கியுள்ளது. தேசிய அளவில் ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இதை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. அதன்படி, நீதித்துறை சிறப்பாகச் செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி வேல்முருகன் மற்றும் நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு வழக்கறிஞர் திலக்குமார், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன், மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in