

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு புறபட்டு சென்றனர்.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை நகரின் முக்கிய பகுதிகளான டவுன்ஹால், காந்திபுரம், ஆர்எஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பீளமேடு, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், ஒண்டிப்புதூர், செல்வபுரம், சுந்தராபுரம், போத்தனூர், கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்த காரணத்தால் போக்குவரத்து நேரிசல் தவிர்க்க முடியாததாக மாறியது. இருப்பினும் முடிந்தவரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு புதன்கிழமை இரவு முதல் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.
வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்து செல்லலாம் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களைகட்ட தொடங்கியுள்ளது.