

திண்டுக்கல்: “திமுக பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “அரசியலுக்கு அதிகம் பேர் வருகின்றனர். 1973-ல் எம்ஜிஆரை பார்த்தது. திமுக பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம். 75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக திமுக இருக்கும். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோசம், மகிழ்ச்சி.
எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள். எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும். தந்தை பெரியாரின் திராவிட மாடலையும், ஒரு காலத்தில் காங்கிரஸ் சோசியலிசத்தையும் பேசியது. காமராஜர் மற்றும் அப்போது இருந்த தலைவர்கள் அனைவரும் பேசினார்கள். இதை குறையாக கூறவில்லை.
அவர்கள் சமத்துவம் என்ற சோசியலிசத்தை நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இதுவரை மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தற்போது குடும்பத் தலைவிக்கு, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என 2 கோடி பேர் பயனடைகின்றனர். மாதமாதம் பெண்களுக்கு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் தான்.
திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். கூட்டணிக் கட்சிகளின் கருத்தை ஏற்று கொள்கை திட்டங்களை முதலமைச்சர் வகுப்பார். இதுவரை தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஒற்றைக் கொள்கையுடன் இருக்கிறார்கள். பதவி என்பதை கூட்டணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்பதை எனது கருத்து.
இதுவரை தனித்து தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏழு முறை ஆட்சி அமைத்துள்ளோம். கூட்டணி ஆட்சி என்பதே இருந்ததில்லை. வருங்காலங்களில் எங்களது முதலமைச்சர் கொள்கை திட்டங்களை அறிவிப்பார். அதற்கு ஏற்றார் போல் தேர்தல் களம் அமையும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முடிந்த பிறகு முதலமைச்சரின் ஆலோசனை கேட்கப்பட்டு, அதன்பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த உள்ள அலுவலர் எப்போது நடத்த வேண்டும் என்று சொல்கிறோர்களோ அப்போது நடத்தப்படும்” என்றார்.