அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு: உயர் கல்வி அமைச்சர் புறக்கணிப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பவன்குமார் சிங், துணைவேந்தர் க.ரவி.
காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பவன்குமார் சிங், துணைவேந்தர் க.ரவி.
Updated on
1 min read

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைகழக 35-வது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பவன்குமார் சிங் பேசினார். தொடர்ந்து 3 பேருக்கு அறிவியல் அறிஞர் பட்டம், 93 பேருக்கு முனைவர் பட்டம், பல்கலை. அளவில் தரம் மற்றும் தங்கம் பதக்கம் பெற்ற 181 பேர் என 277 பேருக்கு நேரடியாக பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.

மொத்தம் பல்வேறு துறைகளில் பயின்ற 42,433 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலை. பதிவாளர் செந்தில்ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதேபோல் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாங்குடி எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்கவில்லை.

டிடி தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த பின்னர், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களில் அமைச்சர் கோ.வி.செழியன் தொடர்ந்து பங்கேற்காமல் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in