‘வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு’ என்ற அறிவிப்பால் பயணிகளுக்கு சிக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வரும் நிலையில், சோதனையின்போது வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: “தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாப்படுகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், அதிக கட்டணம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அதிக தொகையை திருப்பிச் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம். அதேபோல் வெளி மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின் போது, வரி பேருந்துகளுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்து சிறைபிடிக்கப்படும்.

எனவே, பயணிகள் தங்கள் பயணிக்க இருக்கும் பேருந்தின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிறதா என நிர்வாக தரப்பினரிடம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கிடையே, சில பேருந்துகளில் இறுதியாக சென்று சேருமிடத்துக்கான கட்டணமே, வழியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதாரணமாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,400 நிர்ணயித்திருந்தால், அந்த பேருந்தில் மதுரைக்கு செல்ல ரூ.1,000 தான் வழக்கமாக வசூலிப்பார்கள். ஆனால், வழியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் ரூ.1,400 என்றளவில் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in